Monday, April 18, 2011

குறுந்தொகை

1.கொடியில்
ஒரு மலர் போல
ஆடிக் கொண்டிருந்தது
குத்துவிளக்கின்
கிளையில் சுடர் ...

அணியச் சுடும்
தணல் மலர்.



2.எட்டிப் பார்க்கும்போது
தவறி
குட்டையில் விழுந்துவிட்டது
என் முகம் ....
விழுந்த முகத்திற்குப்
பதிலாய்க்
கிடந்த நிலவை
எடுத்துப்
பொருத்திக் கொண்டேன் ..
இது திருட்டில்
சேராது தானே?




3.உதிரமுத்தை
உடைத்து
சுவைத்தேன்
உயிரின் நாற்றம்..


4.இந்தக் கதை
இந்த இதழுடன் முடிகிறது
என்றேன்
அடுத்த இதழில்
தொடர்கிறது
என்றாள் அவள்...


5.நட்பெனச்
சொல்லி
இருத்தினாய் நீ
காதல் என்று
கதைத்தார் சிலர்
உண்மை என்னவென்று
கேட்ட நண்பரிடம்
இன்னமும்
பெயர் வைக்காத
ஒரு வலி
என்றேன் நான்.








 

Friday, April 15, 2011

ஏழாம் நாள் ...

ஒரு கள்ளக் காதலன் போலே
சவுக்கு மரங்களிடையே
சத்தமின்றி ரகசியமாய்
இறங்குகிறது முதிராப் பொன்வெயில்

பாதையில் வெயில் காயும் பூனை
கடந்து போகிறவரை எல்லாம்
சோம்பலாய்
கண் சுருக்கிப் பார்க்கிறது .

சதுரங்கக் கட்டங்கள் போல
கருப்பு வெளுப்பாய்
மினுங்கும் சிறிய குருவி
வாலைத்தூக்கித் தூக்கிக்
கூவுகிறது

காப்பான் இல்லாக் குடத்துக்கும்
கருணையோடு பொழிகிறது
தண்ணீரை
கிராமத்துக் குழாய்...

ஈரக கூந்தல்
ரவிக்கையில சொட்ட
வாசனையோடு தாண்டிப் போகிறாள்
இளம் பெண்

நீளமாய்க் கிடக்கும் ரயில் நிலையத்தில்
சிமிண்டு பெஞ்சில்
தூரப் பார்வையுடன்
தனியாய் அமர்ந்திருக்கிறாள்
குறப் பெண் குழந்தையுடன்..

மரத்திலிருந்து குதித்த
ஒரு இலை போல
காற்றில் இறங்கும்
பட்டாம் பூச்சியை
கைநீட்டிப் பிடிக்க முயல்கிறது
அவள் குழந்தை..

ஓய்வுநாள் காலை
என்ற ஒன்றை
உருவாக்கியவருக்கு
நன்றிகளுடன்
எல்லாவற்றையும்
கடந்து செல்கிறேன் நான்.

Sunday, April 10, 2011

கண்ணி 6

இறங்கும்போது சித்தி பின்னால் வந்து ''ஐயா எங்க போற''என்றதற்கு ''கடை வரைக்குப் போயிட்டு வரேன்.போய் நாளாச்சு என்ன மேனிக்கு கிடக்கோ''என்று பொய் சொன்னேன்.
அப்படியே மேட்டுத் தெரு பக்கமாக நடந்து போய் சற்று நேரம் வாய்க்கால் கரையில் இருக்கலாம் என்று போனேன்..சாயங்காலம் குளித்துவிட்டு வரும் பெண்கள் ஈரச் சேலை சடசடக்க எதிரே போனார்கள்.சிலர் நின்று உற்றுப் பார்த்ததைக் கவனிக்காதது போல விடுவிடுவென்று போனேன்.
''ஏக்கா ..அன்னாபோறது நம்ம குப்பக்கா மவனா''
''அவனேதான்''
''அவனப் பத்தி எதோ சொன்னாய்ங்களே நெசம்தானா''
''என்ன எளவோ..திரும்பி பார்க்காத சவத்து மூதி நம்ம பொறத்தால வந்துரப் போறான்.''

வாய்க்காலில் யாருமில்லை.சற்றுத் தள்ளி யாரோ மாட்டை உள்ளே இறக்கித் தேய்த்துக் கொண்டிருப்பது மட்டும் தெரிந்தது.வைக்கோல் பிரியின் வாசனை வந்தது.மாடு உர்ர் உர்ர் என்று உதறிக் கொள்வது கேட்டது.நான் பக்கத்தில் கிடந்த துவை கல்லில் அமர்ந்தேன்.கல் இன்னமும் வெயிலின் சூட்டோடுதான் இருந்தது.மீன்கள் அங்குமிங்கும் துள்ளிக் கொண்டிருந்தன.தூரத்தில் விநாயகனே வேர் அறுக்க வல்லான் என்று பாட்டு தவழ்ந்து வந்தது.அப்பாவும் நானும் அடிக்கடி இங்கே குளிக்க வந்திருக்கிறோம். இந்த வாய்க்காலில் தான் அப்பா எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தார்.ஆழமே இல்லாது வெறும் மணல் தரையாக இறங்கும் வாய்க்கால் திடீரென்று ஒரு இடத்தில் ஆழமாக சரியும்.அந்த இடம் வந்ததும் தாவி அப்பாவின் முதுகில் ஏறி அவர் கழுத்தைப் பிடித்துக் கொள்வேன்.''எலேய் மெல்லப் பிடிலே மூச்சு முட்டுது''என்பார்.அதை தாண்டியதும் ஒரு படகு போல தன் கைகளில் என்னைப் பிடித்துக் கொள்வார்.ஒரு தடவை முங்கி எழும்போது என் முகத்துக்கு மிக அருகில் ஒரு நீர்க் காகம் நீர்ப் பரப்புக்கு மேல் தலையை உயர்த்திக் கொண்டு வேகமாக நீரோட்டத்தோடு போவதைப் பார்த்து பயந்து அலறி காய்ச்சல் வந்துவிட்டது.

பிள்ளைமார்வீடுகளில் பொதுவாக அப்பா பிள்ளை உறவு அத்துணை நெருக்கமானதாக இருக்காது.ஆனால் சிறுவயதில் இருந்தே அப்பா என்னோடு மிக நெருக்கமாக இருந்தார்.ஒரே பையன் என்பதால் இருக்கலாம்.அம்மா அதிகம் வீட்டை விட்டு வெளியே வந்ததே இல்லை.ரொம்ப சுத்தம்.அவள் என்னைத் தொட்ட நினைவே எனக்குக் கிடையாது.ஆனால் அப்பாவின் ஸ்பரிசம் இன்னமும் நினைவிருக்கிறது.வெயில் கால இரவுகளில் வேர்வை ஒழுக மச்சில் அவரோடு ஒட்டியவாறு தூங்கிய தினங்கள் நினைவு வந்தன.ஆனால் எப்படியோ மெல்ல ஒரு பிரிவு, விலகல் வந்துவிட்டது.
அன்று அப்பா போலிஸ் ஸ்டேசனில் கை கூப்பி நின்றது நினைவு வந்தது.பேப்பர் போடும் வேலைஎன்றாலும் அப்பா ஊருக்குள் தலை நிமிர்ந்தே இருந்தார்.அவர் அப்படி எங்கும் நின்று நான் பார்த்ததில்லை.என் மனம் கசந்து கண்ணில் நீர் புரண்டது.

''ஓவ் அங்க உட்கார்ந்திருக்கிறது ஆரு''
நான் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேரைச் சொல்லாமல் ''பேப்பர்க்காரர் மவன்''என்று தன்னிச்சையாய் சொன்னேன்.

மாட்டைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தவன் நெருங்கி வந்து இருட்டில் உற்றுப் பார்த்து ''சரி சரி ''என்றான்.''பீடிக்கு வத்திக் குச்சி இருக்குமான்னு கேட்க வந்தேன்.உங்க கிட்ட எங்க இருக்கும்..பேப்பர் காரர் மவனுல்லா''என்று போனான்.

நான் வேட்டியை இறுக்கிக் கொண்டு எழுந்தேன்.நேராக பாப்புலர் தியேட்டர் வழியே சேரன்மாதேவி ரோடு சென்று பைவ் ஸ்டார் ஒயின்ஸில் ஒரு விஎஸ்ஓபி க்வார்டரை வங்கி ஊற்றிக் கொண்டேன்.அப்புறம் இன்னொன்று.மணி பதினொன்று ஆகும்போது கடையை மூடப் போவதாசொன்னார்கள்.அதுவரை நான் அங்கு தனியாக வந்ததே இல்லை.பக்கத்திலேயே பரோட்டாக் கடையில் நாலு பரோட்டாவைப் பிய்த்துப் போட்டுக் கொண்டேன்.திரும்ப இறங்கி சாலைக்கு வந்த போது மாதா கோயில் மணிக் கூண்டில் மணி பனிரெண்டு ஒலிப்பதைக் கேட்டேன்.சந்திப் பிள்ளையார் முக்கில் பலகைகளை எடுத்து கடையை மூடிக் கொண்டிருந்தவனைத் தடுத்து ஒரு சிகரட் வாங்கிப் .பற்றவைத்தவாறே நெல்லையப்பர் கோயிலை நோக்கி நடந்தேன்.அந்தத் தேவடியாமவன் அங்குதான் இருக்கவேண்டும்.

மானூர் போகும் கடைசிப் பேருந்தும் போய் சாலையில் சிள் வண்டுகளின் சத்தம் கேட்க ஆரம்பித்திருந்தது.மார்க்கட்டுக்குள் மட்டும் சில லாரிகள் போக முயன்று கொண்டிருந்தன.அவற்றிலிருந்து உதிரும் காய்களை சில வீதி மாடுகள் தின்று கொண்டிருந்தன.இருட்டுக் கடையின் முன்னாள் அல்வா தின்று போட்ட இலைகள் குவிந்து கிடக்க .அவற்றை நக்கிக் கொண்டிருந்த சில சொறிநாய்கள் என்னைக் கண்டதும் கலைந்தோடின.நான் கோவிலுக்கு எதிராக இருந்த மண்டபத்துக்குள் புகுந்தேன்.இங்குதான் பிச்சைக் காரர்கள் கடைகள் மூடியதும் படுத்துக் கொள்வார்கள் என்று நான் அறிவேன்.வரிசையாக போர்வையால் மூடிக் கொண்டு உறங்கும் உடல்கள்.வெளிச்சம் இல்லாததால் இருட்டில் கண்டு பிடிக்க சற்று சிரமமாக இருந்தது.லேசாக உள்ளே கசிந்த சோடியம் வேபரின் மஞ்சள் வெளிச்சத்தில் ஒவ்வொருவராய் உற்றுப் பார்த்துக் கொண்டே வந்தேன்.ஒரு பெண் தொடை வரை ஏறிய சேலையுடன் கிடந்தாள்.அவளருகே பரட்டைத் தலையுடன் ஒரு குழந்தை கால் பரப்பி,வாய்திறந்து தூங்கிக் கொண்டிருந்தது.அதனருகே ஒரு நாய்க் குட்டி கிடந்தது.என்னைக் காது உயர்த்திப் பயத்துடன் பார்த்தது.

அவர்களை அடுத்தாற் போல் கடைசியாக கோல்ட் கவரிங் நகைகள் விற்கும் கடைக்கு முன்னால்அவன் படுத்துக் கிடந்தான்.என் அடிவயிறு சட்டென்று ஐஸ் போல் குளிர்ந்தது.முதுகில் வியர்வைத் துளி ஒன்று உருண்டு உருண்டு போவதை முழுப் போதத்துடன் உணர்ந்தேன்.காலம் உறைந்து ஒவ்வொரு துளியாய் நகர என் வயிற்றில் பொருத்தியிருந்தஅரிவாளை எடுத்துக் கொண்டேன்.எல்லா ரத்தமும் உணர்வும் என் கைக்குப் பாய அது என் மற்றொரு உறுப்பு போல் மாறி விட்டிருந்ததை உணர்ந்தேன்.என் அத்துணை கசப்பும் பெருகிவர அதை அழுத்திப் பிடித்துக் கொண்டு அவனருகே குனிந்து ஆவேசத்துடன் ஓங்கி....
அவன் சட்டென்று புரண்டு படுத்தான்.என் இதயம் ஒரு நிமிடம் புரண்டது.அது அவனில்லை!


நான் சரேல் என்று பாய்ந்து எழுந்து வெளியே வந்தேன்.மூச்சிரைத்தது.ச்சே!என்ன காரியம் செய்ய இருந்தேன்.என் கைகள் நடுங்கின.அவன் புரண்டு படுத்திருக்காவிடில் என்ன ஆயிருக்கும்?நினைக்கவே நடுங்கிற்று.என்ன ஆயிருக்கும்?தவறான ஒரு ஆளைக் கொன்றிருப்பேன்.அருகில் கிடந்த அந்தப் பெண்ணும் குழந்தையும் நினைவு வந்தார்கள்.அந்தப் பெண்ணின் கணவனாகக் கூட அவன் இருந்திருக்கலாம்.அல்லது அந்தக் குழந்தையின் தந்தையாய்..
ஐயோ.நான் ஏன் இப்படி நள்ளிரவில் தெருநாய் போல கத்தியுடன் அலைகிறேன்?என்று கழிவிரக்கம் பெருகி வந்தது. தலை சுற்றிக் குமட்டியது.சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்தேன்.குடல் முழுக்க வெளியே வந்துவிடுவது போல ஒரு வாந்தி.தொண்டை எல்லாம் அமிலம் பட்டது போல் எரிய கண்கள் கலங்கி வழிந்தன.மூச்சிரைத்தது.தண்ணீர் கிடைத்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.கோயிலின் வலது புறத்தில் ஒரு அடி பம்பு இருந்தது.அதை அடித்து அடித்து தண்ணீர் குடித்தேன்..சத்தமே அற்ற அந்த இடத்தில் அதன் ஒலி கிரீச்சிட்டு கிரீச்சிட்டு அடங்கியது.வயிறு முழுக்கக் குடித்துவிட்டு முகத்தையும் கழுவிக் கொண்டேன்.சற்ற தெளிவு வந்தாற்போல் இருந்தது.வானத்தில் நட்சத்திரங்கள் தெளிந்து  வந்தன.மெலிதான குளிர் கற்று வீசியது.வீட்டில் தேடிக் கொண்டிருப்பார்கள் என்று உணர்ந்தேன்.அப்பாவை உடனடியாகப் பார்க்கவேண்டும் எனத் தோன்றியது.மறக்கவேண்டும்.எல்லாவற்றையும் மறந்து வேறொரு வாழ்க்கை வாழவேண்டும்.கடையைக் கவனிக்க வேண்டும்.அதில் கருத்தாய் இருந்து அப்பாவின் நிலத்தை திரும்ப வாங்கிக் கொடுக்கவேண்டும்.அதுவரை அவர் சொல்லுக்கு ஒரு சொல் மாற்று பேசக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.மனம் துடைத்துவிட்டார் போல் இருந்தது.முகத்தைத் துடைத்துக் கொண்டு அரிவாளை எடுத்து வயிற்றில் மறைத்துக் கட்டிக் கொண்டு கிளம்பும்போதுதான் யாரோ என்னைக் கவனிப்பது போல் உணர்ந்து சுற்றிலும் பார்த்தேன்.
அடி பம்பு பக்கத்தில் ஒரு ஆவின் பால் பூத் இருந்தது.அதன் அருகிலேயே நின்றிருந்த தேரை ஒட்டி ஒரு சிறிய மண்டபம் இருந்தது.அந்த மண்டபத்தில் நிழலாய் யாரோ அமர்ந்திருந்தார்கள்.நான் சிறிய தயக்கத்துடன் அந்த மண்டபத்தை பார்த்தேன்..முதலில் அந்தப் பிச்சைக் காரனாக இருக்கக் கூடும் என்றே நினைத்தன்.சட்டென்று அரிவாள் என் மடியில் கனத்தது..ஆனால் கிட்டே நெருங்கிப் பார்க்க அது வேறு என்று தெரிந்தது.

ஒரு அறுபது வயதிருக்கக் கூடிய ஆள்.நெஞ்சுவரை புரளும் தாடி;.மேலே சட்டை இல்லை.நரை மார்பு.சப்பணமிட்டு அமர்ந்திருந்தார்.கைகள் இரண்டும் மடி மேல் இருந்தன.
மடி மேல் இல்லை.அவை அவரது காவி வீட்டிக்கு மேல் தெரிந்த அவரது குறியைப் பற்றிக் கொண்டிருந்தன.

நான் சட்டென்று அருவருத்துப் பின்வாங்கினேன்.எவனோ பிச்சைக் காரன் கைமைதுனம் செய்து கொண்டிருக்கிறான் என்று நினைத்தேன்.ஆனால் அவர் உட்கார்ந்திருந்த நிலை சற்று யோசிக்க வைத்தது.அவர் விறைப்பாய் ஒரு கூன் கூட இல்லது ஒரு இரும்புத் தடி போல அமர்ந்திருந்தார்..அவரது ஆண்குறி மேலே எழும்பி ஒரு அம்பு போல் நின்று கொண்டிருந்தது.அவர் அதை இரு கரங்களாலும் ஒரு கலப்பையைப் போல் பிடித்துக் கொண்டிருந்தார்..அவர் கண்கள் என்னைப் பார்க்கவில்லை.அவை மேலே அவரது புருவத்தை நோக்கித் திரும்பி இருந்தன.

அவர் கழுத்தில் தங்கச் சங்கிலி போல எதுவோ மின்னிற்று.நான் அதை உற்றுப் பார்க்க அது அசைந்தது.
அது சங்கிலி அல்ல என்பதை மிக மெதுவாகவே நான் உணர்ந்தேன்..
மஞ்சள் பல்பின் மங்கலான வெளிச்சத்தில் மினுமினுத்துக் கொண்டு அவர்
கழுத்தைச் சுற்றிக் கிடந்தது.......

 ஒரு பாம்பு.

அது சட்டென்று படமெடுத்து என்னை நோக்கிச் சீறியது.

Saturday, April 9, 2011

உயிர்க் குமிழி ..


ஒரு சிறிய புழு.....
எப்படியோ
எங்கிருந்தோ
என் அறைக்குள்
வந்துவிட்டிருந்தது
விளையாட்டு முடிந்து
உள்ளே வந்த
என் மகன்
மறு யோசனையே இன்றி 
சட்டென்று
அதை செருப்புக் காலால் 
அழுத்தித் தேய்த்தான்

நிச்சயம் 
தோட்டத்தின் பாதுகாப்பிலிருந்து
அங்குவர
அது
மிகுந்த சிரமப் பட்டிருக்கவேண்டும்
அது
யாரைத்தேடி
அவ்வளவுதூரம்
வந்தது
என
யோசித்துக் கொண்டிருக்கிறேன்...

Thursday, April 7, 2011

கன்னி

பிஞ்சும் அல்லாது
பூவும் அல்லது
ஒரு சிறு பெண் ....
சிகப்பும் அல்லாது
கருப்பும் அல்லாது
உள்ளிருந்து ஒளிரும் ஒரு நிறம்
யாரும் எதிர்பாராதபோது
அவள் பளீரென்று எறிந்த சிரிப்பு
கண்டு
பக்கத்தில் இருந்த
எல்லா மலர்களும்
பதறுவது கண்டேன்
நடக்கும்போது
அசைந்த கொலுசு
கடந்த பின்பும்
நிறுத்தவே இல்லை
அசைவதை வெளியில்....

நீர்ச் சருகுபோல
வெளிச்சத்தில் கரையும் ஒரு சட்டையில்
கொய்யாப் பிஞ்சு போல
மேடிட்ட முலைகள் ..
அவள் சுவாசிக்கும்போதேல்லாம்
சிறிய குருவிகள்
போல்
எழுந்து எழுந்து அமர்ந்தன
பாலாடை போன்று
கசிந்து கசிந்து
இறங்கிய பாவாடையில்
இளம் வாழைதொடைகள்
முயங்கி முயங்கிக் கிறங்கின
இரு கிளைகள் நடுவே
ததும்பும்
ஒரு தேன்கூடு போல...


பயிர் நடுவே நாகம்போல்
சத்தமின்றி நழுவி
சட்டென்று மனதுள் புகுந்துவிட்டது காமம்
நள்ளிரவில்
சுவர்களின் தனிமையில்
ஆடை அவிழ்த்து அம்மணமாய் எழுந்து
என் குரல்வளையை நெரித்தது..
நான் தலைவெட்டுப்பட்ட
ஆடு போல வெளியே
தெறித்து ஓடினேன்

தூக்கமற்றவனாய் ...
தூங்க அஞ்சியவனாய்
கடலோரம் கூதலில்
கால்மணல் நொறுங்க நடந்தேன்
காது நுனிகள்
குளிரில் மரத்து உதிரும்வரை
அலையோடு மணலாய்
கலந்து கிடந்தேன்

அடிவயிற்றில் சொருகப் பட்ட
ஒரு வாள் போல
காமம் என் கூடவே இருந்தது
உயிர்மூலத்தில் இறங்கிய
கொடுங்கூர்வாள்..
நான்
எப்படியாவாது
இவ்வாதையை என்னைவிட்டு விலக்கும்
கர்த்தாவே என்று வானோக்கிக் கதறினேன்
விண்மீன்கள் அதிர்ந்து வீழ்ந்தன
அலைகள் உறைந்து போயின

விடிகாலை உடையும் நேரத்தில்
ஒரு பதில் போல்
தூரத்தில் துடித்த
மணியோசை கேட்டு
எழுந்து ஓடினேன்

ஈராயிரம் ஆண்டுகளாய்
நிற்கும் கோயிலினுள்
மூக்கினில் ஒளிரும்
ஒற்றை அணியே
சுடராய் வெளிச்சமாய்
அதே சிரிப்புடன்
அரையில் நெளியாடையுடன்
நின்றிருந்தாள் அவள்...
பிஞ்சும் அல்லாது
பூவும் அல்லாது
ஒரு சிறு பெண்..

Tuesday, April 5, 2011

வானத்திலிருந்து ஒரு தூது

ஒரு குருவி..
தவிட்டு நிறத்தில் 
ஒரு குழந்தையின் 
சிறிய கை அளவே இருக்கும் 
ஒரு குருவி 
மேலிருந்து 
யாரோ எய்த 
அம்பு போல 
பா
     ய்
         ந் 
            து வந்து
அமர்ந்தது ஜன்னல் கம்பியில் 

மழை 
ஒரு கலவி போல் 
நிகழ்ந்து முடிந்து 
சொட்டிக் கொண்டிருந்தது 
மண்வாசனை 
ஒரு அலை போல எழுந்து 
பூமி மேல் பரவியது
காணாத இடங்களில் 
இருந்து கொண்டு
அணில்கள் கிரீச்சிட்டன 
நனைந்த காகங்கள் 
கரகரப் ப்ரியா பாட விழைந்தன 
திடீர் மழையில் திடுக்கிட்டது போல 
மரங்கள் உறைந்திருந்தன 
செம்பருத்திப்பூவிதழில் 
ஒரு முத்தம் போல 
மழைத் துளி கிடந்தது 


இப்போது 
        இன்னுமொரு குருவி வந்தது 
அப்புறம் 
           இன்னுமொரு குருவி 
                       இன்னுமொன்று என...

இப்போது என் வீடு முழுவதும் 
குருவிகள் குருவிகள் குருவிகள் .....
குருவிகள் 
தங்கள் 
இறகுகள் இறகுகள் இறகுகள்
 இறகுகளை 
அடித்துக் கொள்ளும் சப்தம்... 
அது ஒரு இசை போல் எழும்பி 
என்னை நோக்கி வந்தது..

நான் என் 
தற்கொலை முடிவைத் 
தள்ளிவைத்தேன் 

Monday, April 4, 2011

இருளில் இருந்து ஒளிக்கு..

ஒரு ரயில்.....

வெளிச்சப் பித்தான்களுடன்
வெள்ளி ஊசி போல
இரவின் கரிய சட்டையைக்
கிழித்துக் கொண்டு
எங்கோ போகிறது வேகமாய்

ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டே
நிற்கிறான் சிறுவன்
கிழிந்த டவுசரும்
கலைந்த சிகையும்
களைத்த கண்களும்
கழுவாத உடலுமாய்...
வீதியில் உறங்குபவன்...
வீதியில் பிறந்தவன்...

எங்கே போகிறது
என்று தெரியவில்லை
அவனுக்கு
ஆனால் நிச்சயமாய்
அவன் வாழ்வைவிட
வெளிச்சம் நிரம்பிய
ஓர் இடத்துக்கு..
அது போகிறது
என்று நினைக்கிறானோ என்னவோ..


அந்த வண்டிக்குள்
நானும் இருக்கிறேன்
ஏறக்குறைய
அதே நினைப்போடு...
எங்கோ போகிறேன்

ரயில்வண்டிகள்
ஏற்றிச் செல்வது
ஆட்களை மட்டுமல்ல..
என்று தோன்றுகிறது
இல்லையா...

சில கனவுகளையும் ...
Edit

Friday, April 1, 2011

எச்சம்

எப்போதும்
மூடியேக் கிடந்தது
அந்த வீடு
இறுகிய முஷ்டி போல
அல்லது
ஒரு சிப்பி போல
பறவைகள் இல்லாது
தானே
தன்னைக் கட்டிக் கொண்ட
ஒரு கூடு போல....
கனத்த திரைகள் மீறி
கசியும் ஒளியைத் தவிர
உயிர்ப்பின் சுவடுகள்
ஒன்றையும் காட்டா வீடு ....

பள்ளி போகும் குழந்தை
நடை போகும் முதியவர்
கோலம போடக் குனியும் பெண்
ஆபிஸ் போக
வண்டி உதைக்கும் ஆண்
என்று
எந்த மனிதரும்
அந்த வீட்டிலிருந்து
வெளியே வருவதைக்
நான் கண்டதில்லை

கீரை விற்பவள்
குறி சொல்பவர்
ஓட்டு கேட்பவர்
ஓட்டுக்கு காசு கொடுப்பவர்
என்று எவரும்
அதற்குள்
சென்றதையும் பார்த்ததில்லை
நடுவானில் உறைந்துவிட்ட
மழைத்துளி போல
காலத்தில் தனியாக நின்றிருந்தது
வீடு

நேற்று
முதன் முறையாக
திறந்து கிடந்தது
அதன் அத்தனை கதவுகளும்
ஜன்னல்களும்
ஆபாசமாகத் திறந்து கிடந்தன
வாசலில் ஈக்கள் போல
சிறிய கூட்டம்
பதற்றத்துடன் அணுகினேன்

அந்த வீட்டில் இருந்த பெண்
இறந்து விட்டாள் என்றார்கள்
அந்த வீட்டில்
ஒரு பெண்
இருந்தாரா
என்று அவர்களிடம் கேட்டேன்
இருந்திருக்க வேண்டும்
இல்லாவிடில்
இறந்தது யார்
என்று அவர்கள் கேட்டார்கள்
சரிதான் இல்லையா
இறக்கிறதின் மூலமாகவே
தான் இருப்பதை
சிலர்
நிரூபிக்கிறார்கள்

LinkWithin

Related Posts with Thumbnails