Tuesday, August 2, 2011

கண்ணி 8

ஒருநாள் மாலை சாமியைத் தேடிப் போன போது அவர் வழக்கமான இடத்தில் இல்லை.சோழ தேசத்து தாசி ''சாமியோட குடும்பம் வந்திருக்கு கோயிலுக்குள்ள போய்ப் பாரு''என்றாள்.

கோயில் முழுக்கத் தேடி அவரை குளத்துக்கு எதிரே இருந்த நந்தவனத்தில் இருந்த மண்டபத்தில் கண்டு பிடித்தேன்.அந்த இடத்துக்கு அதிகம் பேர் வர மாட்டார்கள்.தெரியாது.சுப்பிரமணியர் சந்நிதியைச் சுற்றிக் கொண்டு வரவேண்டும்.குளத்தில் பூணூலை இழுத்து இழுத்துக் குளித்துக் கொண்டிருந்த அய்யர் ''அங்கெல்லாம் போகக் கூடாது''என்றார்.பிறகு உற்றுப் பார்த்து ''பேப்பர் காரர் மவனா போ போ இந்த வயசுப் பிள்ளைங்க நோர்னாட்டியம் தாங்கலை.,இங்கேயே எல்லா சங்கதியையும் முடிச்சுடுதுங்க..சனியனுங்க..அதான் சொன்னேன் நீ போ'''

சாமி மண்டபத்தில் சப்பணமிட்டு அமர்ந்து கொண்டு எதுவோ தட்டிலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.பக்கத்தில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தனர்.இளவயது பெண் தூக்குச் சட்டியில் இருந்து பரிமாறிக் கொண்டிருந்தாள்.சத்தம் கேட்டு ஏறிட்டு பார்த்து சாமி ''அட வந்துட்டியா..பருப்புச் சோறு தின்னறியாடே.கூட வடம் அதிரசம் சக்கரப் பொங்கல் கூட உண்டு''
நான் தயங்கி நின்றேன்.முதிய பெண் என்னைப் பார்க்காமல் ''நீங்க சாப்பிடுங்க முதல்ல""என்றாள் சற்று கடுப்புடன்.சிறிய பெண்ணின் முகம் கண்கள் யாவும் சிறுத்து சமீபத்தில் அழுதது போல சிவந்திருந்தது.

நான் நிலையை உணர்ந்து ''இல்லை சாமி நான் பூசை பார்த்திட்டு வரேன்'\..நீங்க சாப்பிடுங்க'என்று விலகினேன்

அப்படியே அங்கிருந்து காசி லிங்கத்துக்கு அருகே வந்து அமர்ந்திருந்தேன்.குழந்தைகள் சுற்றுப் பிரகாரத்தில் சத்தமிட்டுக் கொண்டே ஓடுவதை ''ஏய்ய்மெதுவா மெதுவா'' என்று அவர்களின் அம்மாக்கள் சேலை சரசரக்க துரத்திக் கொண்டு நடப்பதை, பரீட்சைக்குப் படிக்கும் மாணவர்களை,நெற்றியில் திருநீறும் முழுக்கைச் சட்டையும் புதிய வாட்சுமாய் இருந்த புதுமாப்பிளைகளோடு நெருங்கி அமர்ந்து ரகசியம் பேசும் புதுத்தாலிப் பெண்களை, கழுத்து வலிக்க சிற்பங்களை வியக்கும் சுற்றுலாப் பயணிகளை எல்லோரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.ஆறுமுகன் சந்நிதியில் ஒருவர் உரத்த குரலில் திருப்புகழ் பாடிக் கொண்டிருந்தார்.

சண்முகத்தோடு அந்தப் பகுதிக்கு அடிக்கடி வருவேன்.பெரும்பாலும் வெளியூரிலிருந்து வரும் புதிய நண்பர்களோடு ஒரு வழிகாட்டி போல..அவர்கள் எல்லா சிற்பங்களையும் வாய்பிளந்து பார்த்துக் கொண்டே வருவார்கள்.ரதி மன்மதன் சிற்பம் பார்த்து அரண்டு போவார்கள்.யாரும் பார்க்காத போது ரதியின் விறைத்து நிற்கும் கல்முலைகளைத் தடவிப் பார்த்து ''இப்படில்லாம் நெசத்துக்குமே பொம்பிளங்களுக்கு நிக்குமா மக்கா''என்று வியப்பார்கள்.சண்முகம் ''அவளுக்கு நின்னாலும் உனக்கு நிக்காதே என்ன செய்வே நீ?..ஒலைல போற ஓணான மாதிரி சாமான வச்சுட்டு..நீ ஏறி வரதுக்குள்ள அவ ஊறிப போய்டுவாளே''என்று சிரிப்பான்.அவர்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் காட்சி போல ரகசியமாக அந்த சிலையைக் கடைசியாய் காண்பிப்போம்.பாவாடையைத் தூக்கிக் காண்பித்துக் கொண்டு ஒரு பெண்ணின் சிலை.லஜ்ஜா தேவி சிலை என்று சாமி ஒருதடவை சொன்னார்.லஜ்ஜை என்றால் வெட்கம் அல்லவா..இப்படி வெட்கமே இல்லாத சிலையை ஏன் கோயிலுக்குள் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டேன்.''நீ மதுரைக்குப் போய்ப் பாரு மேற்குக் கோபுரத்தில இதைவிட வெட்கம்போன சிலை எல்லாம் இருக்கு ''என்றார்.


எனக்கு பருப்புச் சோறு என்றால் ரொம்பப் பிடிக்கும்.அம்மா நன்றாக செய்வாள்.பருப்புச் சோறு,உழுந்தங்களி.சினை இட்லி,தேங்காய்த் திரட்டு, காரத் தட்டை இதெல்லாம் அவளதுகைக்கு நன்றாக வரும்.சிறுவனாக இருந்த போது ஒவ்வொரு சனிக் கிழமையும் கூடத்தில் தனி அடுப்புவைத்து செய்துதருவாள்.ஏதோ ஒரு கட்டத்தில் சிவ தீட்சை எல்லாம் வாங்கிக் கொண்டு தீட்டு துப்புரவு என்று சிடுசிடுப்பவளாக மாறி விலகிப் போனாள்.எனக்கு திடீரென்று அவற்றை எல்லாம் சாப்பிடவேண்டும் போல இருந்தது.பருப்புச் சோறு பரிமாறும் சாமியாரின் மனைவி நினைவு வந்தது.பெரிய மார்பும் பெரிய இடுப்பும் எப்போதும் கோபத்தாலோ வேறு காரணத்தாலோ சிவந்திருக்கும் முகமும்..கோனார் வீட்டில் கட்டியிருக்கும் வெளிநாட்டுப் பசுவை நினைவுபடுத்தும் உருவம்.சாமி ஏன் இவளை விட்டுவிட்டு வந்தார்?கொஞ்சம் பைத்தியம்தான் இந்த ஆள் என்று நினைத்துக் கொண்டேன்.

ஒலிப்பெருக்கியிலிருந்து மெலிய நாகஸ்வர ஓசை தவழ்ந்து வந்துகொண்டிருக்க ஒரு சிறு பெண் கிழிசல் பாவாடையுடன் இடுப்பில் இறுக்கிய தூக்குச் சட்டியுடன் ரகசியமாய் வந்து ''அண்ணே முறுக்கு ரவா லட்டு வேணுமான்னே வீட்டில அம்மா செஞ்சுது''நான் வாங்கிக் கொண்டிருக்கையிலேயே கோயில் வாட்ச் மேன் கையில் கம்பைத் தரையில் தட்டிக் கொண்டே ''ஏய் இங்க விக்க்கக் கூடாதுன்னு சொன்னேன்லா ''என வர சிறு முலைகள் துள்ள ஓடிப போனாள்.

சற்று நேரத்தில் சாமி அந்தப் பெண்கள் தொடர வந்தார்.என்னைப் பார்த்ததும் நின்று ''சரி நீங்க போங்க'

அவர்கள் நின்று அவரையே பார்த்துக் கொண்டிருக்க அந்த சிறு பெண்ணின் உதடு துடித்தது.சாமி கண்களை விலக்கிக்கொண்டு ''லெட்சுமி இவளைக் கூட்டிப் போ '''என்றார்.
லட்சுமி என்று நான் சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.சரியான பெயர்தான்.

அவர்கள் மிகுந்த தயக்கத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே போனார்கள்.
சாமி ''ஸ்ஸ்ஸ் என்றபடியே அமர்ந்தார்.முகம் வாட்டமுற்றிருந்தது

சற்றுநேரம் இருவருமே எதுவும் பேசிக் கொள்ளவில்லை.பின்னர் அவராகவே ''அவளுக்குக் கல்யாணம் வச்சிருக்கு''என்றார்.
இன்னும் கொஞ்சம் மௌனம். பிறகு ''புழுவா இருக்கறவரை கூட்டிலே இருக்கலாம்.ஒருதடவை பறந்து பார்த்து வானம் எதுன்னு தெரிஞ்சுட்டா பிற்பாடு எப்படி இருக்கறது?''என்றார்..விளக்குவார் என்று எதிர்பார்த்தேன்.சட்டென்று ''இன்னிக்கு ராத்திரி ஒரு இடத்துக்குப் போவோமாடே''என்றார்.

அன்றிரவுதான் என்னை அம்மநாதர் கோயிலுக்கு அழைத்துப் போனார்.அது தாமிரபரணிக் கரையில் இருந்த ஒரு பாழடைந்த கோயில்.அம்பாசமுத்திரம் போகும் வழியில் இருந்தது.ராஜராஜ சோழன் காலத்துக் கோயில்.அந்த ஊரில்  உள்ள மற்ற கோயில்கள் எல்லாம் நன்றாக இருக்க இந்தக் கோயில் மட்டுமே அப்படி இருந்தது.அங்கு நிறைய பாம்புகள் இருப்பதாக உலவிய வதந்தியும் சிலர் அதைப் பாம்புக் கோயில் என்று அழைத்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.அங்கு முன்பு பூசை செய்த பூசாரி ஒருவர் ஏனோ அந்தக் கோயில் முழுவதுமே பாம்ம்புகளை படம் படமாக வரைந்துவைத்திருந்தார்.பகலிலேயே யாரும் போகஅஞ்சும் இடம்.அங்கு ஐந்து தலை நாகம் ஒன்று உண்டு என்று புரளி உண்டு.சாமியிடம் கேட்டதற்கு ''இல்லை இரண்டு தலைதான்""என்றார்.

ஒரு நீண்ட எவரடி பித்தளை டார்ச்சுடன் பாலத்து நிறுத்தத்தில் இறங்கிய எங்களை கண்டக்டர் சந்தேகமாக உற்றுப் பார்த்தான்.

அன்று முழுநிலவு என்பதைப் பிறகே உணர்ந்தேன்.ஆறு ஒரு வெள்ளி நூல் போல் ஓடிக கொண்டிருந்தது.தூரத்தில் எங்கோ கிளிகள் கெக்கலி இட்டுக் கொண்டிருப்பது கேட்டது.வெகுதொலைவில் ராமர் கோயிலில் இருந்து அர்த்த சாம பூஜைக்கான மணி ஒலி ஒரு முறை கேட்டு தேய்ந்தது.காலடியில் ஆற்று மணல் சப்தமிட நாங்கள் ஆற்றுக்குள் இறங்கினோம்.காற்று முழுவதும் மருக் கொழுந்து வாசனை பலமாக இருந்தது.லேசாகத் தூறல் போட்டது.ஆனால் மேக மூட்டம் இல்லை.ஆற்றின் அந்தக் கரையில் இருந்து வினோத ஒலிகள ஆற்று நீரால் மழுப்பப் பட்டு மிதந்து வந்தன.

சாமி கரையில் ஒரு இடததில் என்ன உட்காரச் சொன்னார்..பிறகு தனது துணிகள் எல்லாவற்றையும் கழற்றிவைத்துவிட்டு நிர்வாணமாக ஆற்றினுள் இறங்கினார்.அவர் எவ்வளவு வெண்மையாக இருந்தார் என அப்போதுதான் பார்த்தேன்.நான் குளிரில் வெடவெடவென்று நடுங்கிக் கொண்டிருந்தேன்.ஆனால் அவருக்கு குளிர்வதாகவே தெரியவில்லை.நிதானமாய் குடைந்து குடைந்து நீராடிக் கொண்டிருந்தார்.நான் அவரது இறுகிய உடம்பையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.இழைப்புளியால் வெட்டினார் போன்று கூரிய கோணங்களுடன் முறுகிய உடல்.அவர் சத்தமே இல்லாது ஒரு சிறு பறவை போல் குளிப்பதை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேனோ தெரியவில்லை.சற்றுநேரம் கழிந்தபிறகே என்னருகில் வேறொரு ஆள் இருப்பதை உணர்ந்து சட்டென்று பதறி திரும்பினேன்.

ஒரு பெண்.

காவி சேலையில் என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்,சத்தமே இல்லாமல் அவர் எப்படி அங்கு வந்தார் என்று ஒருகணம் வியந்தேன்.அவருக்கு முப்பதுக்கும் ஐம்பதுக்கும் நடுவில் எந்த வயதும் இருக்கலாம்.தலை முடி முழுவதும் சடை சடையாய் தோளில் முறுகிக் கிடந்தது.ஆனால் முகத்தில் எந்த சுருக்கமும் இல்லை.அவருக்கு பூனைக் கண்கள் என்று முதலில் நான் நினைத்தேன்.அல்லது நிலவொளியில் அந்தக் கண்கள் அவ்விதம் மினுங்குகின்றவ்ன எனத் தெரியவில்லை.நதிப் பச்சையின் வாசத்தையும் தாண்டி அவரிடமிருந்து ஏதோ ஒரு வாசனை எழும்பி வந்தது.அவர் ஒரே சமயத்தில் என்னைப் பார்ப்பது போலவும் எனக்குப் பின்னால் இருக்கிற வேறு யாரையோ பார்ப்பது போலவும் இருக்க நான் குழப்பமடைந்து பின்வாங்கினேன்.அப்போது  சாமி ஆற்றிலிருந்து நீர்சொட்ட எழுந்துவந்தார்.பெண்மணி என்னிடமிருந்து தன் பார்வையை விலக்கிக் கொண்டு சாமியைப் பார்த்து சட்டென்று திரும்பினார்.சாதரணமான மனிதர்கள் கழுத்தைத் திருப்ப்பிப் பார்ப்பது போல இல்லை அது.ஏனோ ஒரு பாம்பு படத்தைத் திருப்பி பார்ப்பது போல அது இருந்தது.

நான் திடீரென்று மிகுந்த குளிராகவும் பயமாகவும் உணர்ந்தேன்.சாமி என்னைப் பார்த்துத் திரும்பி ''பயப்படாதே''என்றார் பிறகு அவள் அருகே நெருங்கி அவள் கைகளைப் பற்றிக் கொண்டார்.இருவரும் அப்படியே கொஞ்ச நேரம் நின்றிருந்தார்கள்.பிறகு அந்தப் பெண் கைகளை விலக்கிவிட்டு தன் ஆடைகளைக் களைய ஆரம்பித்தார்.சற்று நேரத்தில் எல்லா உடையையும் களைந்து சாமியின் கையில் கொடுத்து பிறந்த மேனியாக நதிக கரையில் நின்றார்.நான் மூச்சுவிட மறந்து அப்படியே ஒடுங்கி நின்றிருந்தேன்.அவர் மூககுத்தி அணிந்திருந்தாள்.ஏனோ அது அவர் ஆடையைக் கழற்றும்வரையில் என் கண்ணில் படவில்லை.கழுத்தில் ஒரு ஸ்படிகமலை .இரண்டும் நிலவொளியில் கூர்ந்து கூர்ந்து மின்னின.நிலவு ஏற ஏற அவர் கண்களின் பிரகாசம் கூடிக் கொண்டே இருந்தது.அவர் மார்புகள் நான் கோயிலில் பார்த்த ரதியின் முலைகளைப் போலவே திமிர்த்து இருந்தன.அவரது உடலே இயற்கையாய் வளர்ந்தது போல இல்லாமல் செய்யப் பட்டது போல் இருந்தது.அவரது சருமத்தின் நிறம் வெண்மையாக மட்டும் இருக்காவிட்டால் அவரை ஒரு சிலை என்றே சொல்லிவிடலாம்.மார்புகள் முடிந்து இறங்கும் இடத்தில் சிலைகளுக்கு இருப்பது போலவே சிறு குழி இருந்தது.மெல்லிய ரோம வகிடுகள் ஒரு பெரிய கருஞ்சுழி போல கிடந்த அவரது நாபியில் இறங்கித் தொலைந்தன.என்னால் அதற்கு மேல் பார்க்கவே முடியவில்லை.பார்த்தால் இறந்துவிடுவேன் என்பது போல உணர்ந்தேன்.அவர் நிதானமாய் என்னைக் கடந்து ஆற்றில் இறங்கினார்.இறங்கும்போது திரும்பி என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.அதே பாம்புத் திரும்பல் ...பவளக் கோலிகள் போல சட்டென்று மினுங்கி மங்கும் கண்கள் ..

நதியில் மூழ்கி எழுந்ததும் ஒரு கணம் அவரது புன்னகை ஒரு தீச்சுவாலை போல பாம்பின் நாவு போல நீண்டு என்னைத் தீண்டி பின்வாங்கியது.




3 comments:

  1. வர்ணணைகளில் பிரமித்த படித் தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. அவிழ்க்க அவிழ்க்க தீராத புதிர் தான்....!

    ReplyDelete
  3. padiththu mudiththathum silirkirathu

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails