Sunday, October 10, 2010

உடல் தத்துவம் 10

எச்சரிக்கை! முதிர்ந்த வாசகருக்கு மட்டும்!

நேற்று அதி காலையிலேயே எழுந்து டாக்டர் வீட்டுக்குப் போய்விட்டேன்.அவர் சுத்தமாக மயிர் அற்ற வெறும் மார்புடன் பூஜைக்கு நந்தியாவட்டை பறித்துக் கொண்டிருந்தார்.மழையில் போர்டிகோ முழுக்க நனைந்திருக்க வாசலில் இருந்த பிரம்புச் சேரில் காத்திருந்தேன்.என்னைப் பார்த்ததும் புருவம் உயர்த்தி சற்று ஆச்சயமாய்ப் பார்த்தார்''என்னாச்சு''என்றார்.''ராத்திரி முழுக்க தூக்கமே இல்லை''என்றேன்.''மறுபடி உள்ளே குரல்கள்''
அவர் ''மாத்திரை சாப்பிட்டீங்களா''
''சாப்பிட்டேன்.கேட்கலை.நடுராத்திரில  முடியாம இன்னொன்னு சாப்பிட்டும் முடியலை''
''அப்படில்லாம் நீங்களே டோசெஜ் கூட்டக் கூடாது ''என்றார் சற்று கோபமாய்.
'ரொம்ப முடியலை.அதான்.ராத்திரி முழுக்க அவ குரல் என்கிட்டே பேசிட்டே இருந்தது''
''யார்''
'மேகி.மேகி அத்தை''
''ஒ.''என்றார்..''இருங்க.பூஜை முடிச்சுட்டு வந்துறேன்''என்று போனார்.
வீட்டு வேலைக்காரி வெளிவந்து கிழிந்த ரவிக்கை வழி கொஞ்சூண்டு மார்பு தெரிய டீ கொடுத்துப் போக அவள் மீதிமார்பு எப்படி இருக்கும் என்று யோசித்தேன்.ச்சே...
டீ குடித்ததும் சட்டென்று தளர்ந்தேன்.ஏனோ கண்ணீர் வந்தது.டாக்டரிடம் வந்தாகிவிட்டது.இனி அவர் பார்த்துக் கொள்வார்.
ஆனாலும் என்ன ஒரு கொடுமையான இரவு!இரவு முழுதும் மேகியின் நினைவுகள் என்னைக் குத்திக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தன.அவள் எனது இடது காதில் 'ஆத்துமமே.என் முழு உள்ளமே'என்று பாடிக் கொண்டே இருந்தாள்.அவளது முலைவாசனையைக் கூட  உணர்ந்தேன்.டாக்டரிடம் சொல்லவேண்டும்.முதலில் மேகியிடம் இருந்து என்னிடம் விடுவிக்கச் சொல்லி.ஹோமியோவில் 'நோய் திரும்புதல்'என்று ஒன்று உண்டு என லீலா  தோமஸ் சொல்வாள்.அதாவது இன்று உள்ள ஒரு நோயைக் குணப்படுத்த முனைகையில் அது மெல்ல மெல்ல அது கடந்து வந்த அறிகுறிகளை திரும்பக் கொண்டுவரும்.நோய் மெல்லத் திசைமாறி அதன் பழைய படிக் கட்டுகளில் இறங்கிச் செல்லும்.கடைசியில் அதன் முதல் வரை போய் மெல்ல இல்லாமல் ஆகும்.உண்மைதான் எனத் தோன்றுகிறது..மேகியின் முடிச்சை அவிழ்க்காமல் லீலாவை புரிந்து கொள்வது சாத்தியமே இல்லை.

மேகி அத்தை க்வார்டர்சில் ஒரு புதிய அலையையே கொண்டுவந்தாள்.அவள் உடைகள் கவனிக்கப்பட்டன.அங்கிருந்த பெண்கள் உடுத்தும் சேலைகளை அவள் உடுத்தவில்லை.அவை அவள் சருமம் போல் மென்மையாய் அவள் உடம்புக்கே பிறந்தவை போல் அவள் உடலிலிருந்தே முளைத்தவை போல் இருந்தன.அவை எல்லாம் அன்றைய சினிமாக்களில் வருபவை என்று ஒருநாள் அம்மா சொன்னாள்.அம்மா சினிமா பார்ப்பாள் என்பதே அன்றுதான் எனக்குத் தெரிந்தது.அவள் அட்டைக் கருப்போ ஆபாசச் சிவப்போ இல்லை.சற்றே இளகிய சாக்லேட் நிறம்.அவளது ஜாக்கெட்டுகள் கச்சிதமாய்த் தைக்கப்பட்டவை.தைப்பது அவளேதான்.ஒரு சிங்கர் தையல்மெசின் ஒன்று ஊரில் இருப்பதாய்ச் சொன்னாள்.க்வார்ட்டர்சில் இருந்த நிறைய பெண்கள் அவள் ஊருக்குப் போகும்போதெல்லாம் அவளிடம் சொல்லிவைத்து ஜாக்கட் தைத்துக் கொண்டனர்.அவள் தைத்துக் கொடுத்த ஜாக்கட்டை அணிந்தபிறகே அஞ்சுவின் அக்காவுக்கு மார்புகள் உண்டென்ற விசயமே ஊருக்குத் தெரிந்தது.அவள் போடும் கொண்டைகளும் பிரசித்தமானவை.அதற்கு அவள் மாட்டும் வலைகள்.கொண்டை ஒசிகள்.பட்டாம்பூச்சிகள் துடிக்கும் ப்ரூச்ச்சுகள்.எப்போதும் கையில் ஒரு வண்ணக் குடை வைத்திருப்பாள்.ஆனால் அதை அவள் விரித்து பார்த்ததே இல்லை.பெண்களுக்கென்று தயாரிக்கப் பட்ட நளினமான செருப்புகளை அவள்தான் அந்த ஊருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.ஆனால் அது மற்றவர்களுக்குப் பொருந்தவில்லை.விநாயகத்தின் அம்மா அதை முயற்சித்துப் பார்த்து தண்ணீர் தூக்கையில் தடேர் என்று விழுந்து ஒருமாதம் ஆஸ்பத்திரியில் இருந்தாள்.பெண்கள் ஒரேசமயம் அவள் மீது விருப்பும் பொறாமையும் கொண்டார்கள்.ஆனால் அவளிடம் நேரடியாக எதையும் காண்பிக்கமாட்டார்கள்.

அவளிடம் எதைச் செய்தாலும் ஒரு நளினம் இருந்தது.எதையும் நிதானமாகவே செய்வாள்.வீட்டுக்குள் நுழையும் போது செருப்புகளைக் கழற்றிப் போடும் செய்கையைக் கூட மிகுந்த நுண் உணர்வுடன் கவனம் கொடுத்துச் செய்வாள்.அவள் வீடு எப்போதும் சுத்தமாக மட்டுமல்ல.அழகாகவும் இருந்தது.அவளிடம் எப்போதுமே ஒரு குளிர்ச்சி இருந்தது.அவள் கைகள் எப்போதுமே சிலீர் என்றுதான் இருக்கும்.அவள் சிரிக்கும்போது உங்களால் பதிலுக்கு சிரிக்காமல் இருக்கவே முடியாது.அது ஒரு குளிர் அலை போல் பரவி உங்களை நோக்கி வருவதை உணரமுடியும்.அவள் கண்களுக்கு மை இடுவது இல்லை.ஆனால் எப்போதுமே அப்போது தூங்கி எழுந்தாற்போல் ஒரு சாய்வு,மயக்கம் இருக்கும்.அவளிடம் பிரத்தியேகமான ஒரு வாசனை இருந்தது.அவள் பாவித்த சிலோன் லக்ஸ் ,கோகுல் சந்தனப் பவுடர் தாண்டி அவளுக்கேயான தனிவாசனை.கொஞ்சம் குழந்தை வாசனை போலவும் கொஞ்சம் வைக்கோல் வாசனை போலவும் இருக்கும்.அவள் நினைவு எழும் போதெல்லாம் என்னைச் சுற்றி இந்த வாசனை எழுகிறது.குறிப்பாக பாத்ரூமில் அவள் வாசனை திணற அடிக்கும் வலிவுடன் இருக்கும்.அவள் பாத்ரூம் போய் வந்த உடனே  நானும் போய் அந்த வாசனையில் கிறங்கி நிற்பேன்.ஒருவேளை அது அவளின் சிறுநீர் வாசனையாகக் கூட இருக்கலாம்.கூந்தல் மட்டுமல்ல சில பெண்களின் சிறுநீர் கூட வாசனையாக இருக்கும்.[அவர்கள் நாபிக் கமலத்திலிருந்து வருகிறது.அல்லவா.என்றார் டாக்டர்]சில பெண்கள் நேர் எதிர்.[காதுகளில் எம்.வி .வெங்கட்ராம் இப்படி ஒரு பெண் பற்றி சொல்ல்கிறார்]


''சிறு வயதில் உங்கள் புலன்கள் எல்லாம் சுத்தமாக வலிவாக இருக்கின்றன.பதின்மத்துகுப் பிறகு அவை மெல்ல மெல்ல தளர்கின்றன''என்றார் டாக்டர் இதற்குப் பதிலாக.''அதாவது இப்போது உங்கள் மூக்குக்கு வயசாகிவிட்டது.ஆனால் நினைவுக்கு அத்தனை வயசாக வில்லை.அது இன்னமும் எலாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறது.உங்கள் பிரச்சினையே இதுதான்.உங்கள் மனம் மறத்தல் என்ற செய்கையை சரியாக கற்றுக் கொள்ளவில்லை.ஒருவன் மனநிலை பிறழாமல் இருக்க இந்த செய்கை முக்கியம்.உடலுக்கு உறக்கம் போல்.நாங்கள் கொடுக்கும் மாத்திரைகள் எல்லாம் உங்களை தூங்கவும் மறக்க்கவுமே வைக்கின்றன.''

ஆரம்பத்திலிருந்தே மேகி அத்தைக்கு துணையாக நான் அவள் வீட்டில் இரவு படுத்துக் கொள்வேன்.முதலில் சில நாட்கள் சுதாதான் படுத்துக் கொன்டிருந்தாள்.ஆனால் திடீர் என்று மாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.நடு இரவுகளில் அத்தை அழுவதாகவும் அது தன்னைப் பயமுறுத்துவதாகவும் சொன்னதை யாரும் நம்பவில்லை.''உனக்கு மேகி அத்தை மேல் பொறாமை''என்றதற்கு கோபமடைந்து ''போடா.பன்னி''எனறாள்.எதனாலோ சுஜா சுதா இரண்டு பேருக்குமே அவளைப் பிடிக்கவில்லை.''அவளும் அவ கொண்டையும்''என்று முகத்தை சுளித்தார்கள்.ஆனால் எங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.விநாயகம் கூட அவனது ஆரம்ப வெறுப்பை விட்டுவிட்டு அவளிடம் பழகுவது பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

அத்தைக்கு ஏசுவின்  மேல் மிகப் பெரிய காதல் இருந்தது.நான் ஏசுவின் தோழி என்று ஒருநாள் சொன்னாள்.முதல்நாள் அவள் வீட்டில் படுத்துக் கொள்ள நான் ஐந்து தலை பாம்புக்காய்ப் பயந்த போது ஏசுவின் படத்தைக் காட்டி ''எல்லா பாம்பும் இவரைக் கண்டா பயப்படும்'' எனறாள்.பாலைவனத்தில் வானோக்கி ஏசு பிரார்த்தனை செய்யும் படம்.எனக்கு நம்பிக்கை வரவில்லை.இவரா என்பது போல் பார்த்தேன்.ரொம்ப சோகமாகவும் சோகையாயும் இருந்தார்.அவள் புரிந்து கொண்டு 'பலம் என்பது உடம்பினால் வருவதல்ல.ஒழுக்கத்தினால்  வருவது''எனறாள்.எனக்கு இப்போதும் நம்பிக்கை இல்லை.கிளாசில் பாண்டியன் என்று ஒரு தேவமார்ப் பையன் எனக்கு எதிரியாக இருந்தான்.ஆள் திண்டு கணக்காய் இருப்பான்.அவனுக்கு ஒழுக்கம் என்ற வார்த்தையே தெரியாது.ஆனால் ஒவ்வொருதடவையும் சண்டையில் அவனே ஜெயிப்பான்.
 ஒவ்வொரு வெள்ளிக்  கிழமையும் அவள் வீட்டில் ஒரு பிரார்த்தனைக் கூட்டம் நடக்கும்.எல்லா  சிறுவர்களும் அங்கு வருவார்கள்.விவிலியத்திலிருந்து ஏதாவது ஒரு கதை சொல்வாள்.பிறகு பிரார்த்தனைக்கு அப்புறம் எல்லோருக்கும் கேக் தருவாள்.அந்த கேக் பொருட்டுதான் பெரும்பாலும் போவோம்.விநாயகம் கூட வந்தான்.ஆனால் கேக்கிற்கு முன்னால்அவள்  சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் கேக்கைத் தாமதப் படுத்தும் முயற்சியாகவே அவன் கண்டான்.'முதல்லியே கேக்கைக் கொடுத்தா நல்லா இருக்குமே''என்று அவன் சொன்ன யோசனையை அவள் ஏற்றுக் கொள்ளவில்லை.அவனை விட்டிருந்தால் பரமபிதாவுக்கான பிரார்த்தனையில் சில மாற்றங்கள் செய்திருப்பான்.'அன்றன்றைய அப்பத்தை அன்றே  தாரும்'என்பதில் 'உடனே' என்று ஒரு வார்த்தை சேர்க்க அவன் மிக விரும்பினான்.

அவளிடம் சித்திரத்தில் எழுதிய விவிலியம் ஒன்று இருந்தது.அதை எனக்குப் பரிசாய்த் தந்தாள்.பெரும்பாலும் அதிலிருந்து கதைகளை நான்தான் அவர்களுக்கு உரக்க வாசித்துக் காண்பிப்பேன்.அதைப்படிக்கப் படிக்க எனக்கு அதில் சந்தேகங்கள் முளைத்துக் கொண்டே இருந்தன.இந்த சந்தேகங்கள் அவளுக்கு முதலில் சந்தோசம் கொடுத்தாலும் பிறகு பெருத்த சங்கடத்தையே அளித்தன.''ஆண்டவரை பரிசோதிக்கக் கூடாது பையா''என்பாள்.

விவிலியத்தின் முதலிலிருந்தே சந்தேகம் எனக்கு ஆரம்பித்துவிட்டது.சர்ப்பம் வந்தபிறகுதான் ஆதமும் ஏவாளும் தாங்கள் ஆடை இல்லாமல் இருப்பதை உணர்கிறார்கள்.தவிர சர்ப்பம் அப்படி என்ன தப்பாய்  சொல்லிவிட்டது.நீங்களும் கடவுள் மாதிரி ஆகலாம் என்றுதானே.அதற்குப் போய் இவ்வளவு பெரிய தண்டனையா..அப்படியானால் கடவுள் நாமெல்லாம் ட்ரெஸ் இல்லாமல் திரிவதைத்தான் விரும்புகிறாரா..

அடுத்த சந்தேகம் வேசியை ''உங்களில் தப்பு செயாதவர்கள் மட்டும் கல்லெறியுங்கள் என்று சொன்ன கர்த்தர் கல் எறிந்திருக்கலாமே.அப்படியானால்..

இதைவிட அடுத்ததாய் நான் கேட்டக் கேள்விதான் அவளை ரொம்பப் பயமுறுத்திவிட்டது.திடீரென்று படுக்கையில் இருந்து எழுந்து ''அத்தே..விபச்சாரம்னா என்ன''என்றேன்.

அவள் உண்மையிலேயே கலங்கி கண்ணெல்லாம் நீர்த்து  விட்டது.என் தலை மேல் கைவைத்து கண்மூடி ''இந்த சிறுவனின் மனதை சாத்தானுக்கு கொடுத்துவிடாதீரும் கர்த்தரே''என்று உருகிப் பிரார்த்தனை செய்தாள்.

மெல்ல மெல்ல எனக்கு கர்த்தரைவிட சாத்தானின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.அவன் கர்த்தரைப் போல் இல்லாமால் ஒரு சுவராஸ்யமான கேரக்டர்.கர்த்தர் ஒரு தோத்தான்குளி என்பது போல் ஒரு பிம்பமே உருவாயிற்று..ஆனாலும் சாத்தானை நம்பமுடியாது.அவன் வழி கெடுப்பவன் எனறாள் அத்தை.ஆசை காட்டி உன்னை குழியில் தள்ளுபவன் என்றாள்.சாத்தான் மலை மீதிருந்து ஏசுவுக்கே ராஜ்யங்களைத் தருவேன் என்று ஆசை காட்டியவன் எனறாள்.

எனக்கு இப்போது பயம் வந்துவிட்டது.''என் மனதில் சாத்தான் புகுந்துவிட்டானா அத்தே''என்று கண்ணீருடன் கேட்டேன்.அவள் என்னை அனைத்துக் கொண்டாள்.''பயப்படாதே.இது தேவனின் வீடு.ஒரு போதும் சாத்தான் இங்கு வரமுடியாது''என்றாள்.

ஆனால் அவ்விதம்  நடக்கவில்லை.சாத்தான் அந்த வீட்டுக்குள் வந்தான்.ஆனால் என் மூலமாக அல்ல.உண்மையில் சாத்தானின் குறி நானே அல்ல என்பது பிறகுதான் தெரிந்தது.

4 comments:

  1. வாவ்! எழுத்துல சொக்குப்பொடி வெச்சிருக்கீங்க!

    ReplyDelete
  2. எல்லாத்தையும் சேர்த்து படிக்கும் பொது நிஜமா ஒரு கிளாசிக் போலத் தான் இருக்கும் ..
    அருமையான நீரோட்டம் போன்ற நடை ..
    just enjoyed reading it

    ReplyDelete
  3. நகைச்சுவையும் திகிலும் கலந்து கொடுத்திருக்கிறீர்கள். ரசிக்கிறேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails