Saturday, July 31, 2010

மஞ்சள் பல்பு

நான்
மஞ்சள் பல்புகளை
நேசிக்கிறேன்.
குழல் விளக்குகள்
வேபர் சுடர்கள்
நியான் மின்னல்கள் என்று
மேலும்
புதிய அறிவியலுடன்
ஏராள
ஒளி உமிழிகள்
வந்துவிட்டாலும்
நான்
மஞ்சள் பல்புகளையே
நேசிக்கிறேன்.

என்
பச்சைப் பால் நாட்கள்
முழுவதையும்
கிராமங்களின்
இருட்டுக்கு
தங்கச் சரிகை தைக்கும்
இந்த ஒற்றைத் தெரு விளக்குகளின்
அடியில்தான்
கழித்திருக்கிறேன்

இரவின்
தனிமையையும் அச்சத்தையும்
ஏக்கத்தையும் ஏகாந்தத்தையும்
மிகைபடுத்திக்
காண்பிக்கும்
சுவர்க் கோழிகளின்
ஒற்றை ஸ்வரப் பாட்டோடு
படித்துறையில் தளும்பும்
நதியில்
கரையும்
இந்த மஞ்சள் ஒளிவலையில்தான்
முதன் முதலாய்
உன் மீதான காதலை
உணர்ந்தேன்.

என்னென்னவோ சொல்கிறார்கள்.
அதிக மின்சக்தி அருந்தி
குறைந்த வெளிச்சமே கொடுக்கிறது.
புவியின் சூழலை
வெதுப்பி உருக்குகிறது .
ஆயுளும் குறைவே என்கிறார்கள்.

விட்டுவிடுவதற்கு
ஏராள காரணங்கள்
இருந்தபோதும்
உன்னையும்
மஞ்சள் பல்புகளையும்
ஏனோ
இன்னமும்
நேசிக்கவே செய்கிறேன்..

3 comments:

  1. நல்ல கவிதை பதிவு .....வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வெளிச்சம் இன்னும் பரவ வாழ்த்துக்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails